விவிலியக் கல்வி

1. இணையவழி விவிலியக்கல்வி

2016ஆம் ஆண்டு www.tnbcbc.org என்ற வலைத்தளம் தொடங்கப்பட்டு இணைய வழி விவிலியக்கல்வி ஆரம்பிக்கப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்டவர் பதிவு செய்தாலும் 16 பேர் மட்டுமே தொடர்ந்து பங்கெடுத்தார்கள். எனவே அம்முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், கோவிட் பெருந்தொற்று மனித சமுதாயத்துக்குக் விட்டுச்சென்ற ஒரு கொடை என்னவென்றால் சமூகத்தொடர்பு ஊடகங்களின் அசுர வளர்ச்சி. செய்திப் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல, கூட்டங்கள், கருத்தரங்குகள், இணையவழி வகுப்புகள் ஆகியவற்றிற்கும் ஊடகங்கள் பெரிதும் பயன்பட்டன். இப்பின்னணியில், 2023இல் இணையவழி விவிலியக்கல்வி ஆரம்பிப்பது அவசியமும் பயனுள்ளதுமாய்ப்பட்டது. 172 பேர் பதிவு செய்தாலும், வகுப்புகளில் பங்கெடுத்து சான்றிதழ் பெற்றவர்கள் குறைவு. தற்போது 263 பேர் பதிவு செய்த நிலையில், 170-180 தொடர்ந்து பங்கெடுக்கின்றார்கள். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும்.

2024-2025

தமிழக விவிலியப் பணிக்குழுவின் இணையவழி விவிலியக்கல்வி

2023-2024

தமிழக விவிலியப் பணிக்குழுவின் இணையவழி விவிலியக் கல்வி

2005

பூந்தமல்லி புனித பவுல் விவிலியப் பயிற்சி நிலையம் மூலமாக விவிலிய கல்வி வழங்கப்பட்டது

2. அஞ்சல்வழி விவிலியக்கல்வி

1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை அநேகர் விவிலியத்தை இரண்டாண்டுகளில் கற்றுக்கொள்ள பேருதவியாக இருந்திருக்கிறது. 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியிருக்கென்று ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சியில் பெரியவர்களும் பங்கேற்றுப் பயன்பெறுகின்றார்கள். தற்போதைக்கு இதில் சேர்ந்து விவிலியம் கற்பவர்கள் வெகு சிலரே. தமிழக விவிலியப் பணிக்குழுவிடமிருந்த அஞ்சல்வழி விவிலியக் கல்வியை தேசிய விவிலியப் பணிக்குழுவானது நாடு முழுவதும் பரவலாக்கம் செய்திருக்கிறது.

அஞ்சல் வழி விவிலியக் கல்வி என்பது தமிழக மற்றும் புதுச்சேரி கிறிஸ்தவ ஆலயக் கவுன்சிலின் (TNBCLC) ஒரு மகத்தான முயற்சியாகும். இது பைபிள் (விவிலியம்) பற்றிய அடிப்படை அறிவையும் ஆழ்ந்த ஆன்மீக சிந்தனைகளையும் பெற விரும்பும் அனைவருக்குமான தூரக்கல்வி திட்டமாகும்.

கற்றல் முறைகள்

  • அஞ்சல் வழி: பாடப் புத்தகங்கள் மற்றும் பாடங்கள் உங்கள் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

  • தனித்துப் பயிற்சி: தங்களது நேரத்திற்கேற்ப பாடங்களை படித்து, மதிப்பீடு செய்யப்படலாம்.

குறிக்கோள்

கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையை விளக்கி, பைபிள் அறிவை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது.

பைபிள் செய்திகளை நடைமுறை வாழ்வில் இணைக்க உதவுதல்.

3. விவிலிய பட்டயப் படிப்பு (கோடை விடுமுறையில்)

மூன்றாண்டு சுழற்சி முறையில் விவிலியம் முழுவதையும் பொது நிலியினர்க்கும் துறவறத்தார்க்கும் கற்பிக்கும் நோக்குடன் 1997 முதல் கோடை விவிலியப் பயிலரங்கம் மையத்திலும் மதுரை, சிவகங்கை போன்ற மறைமாவட்டங்களிலும் ஒரு சில ஆண்டுகள் நடத்தப்பட்டது. கோவிட் தொற்றுக்குப்பிறகு தற்போது மையத்தில் மட்டும் நடைபெற்று வருகிறது.

4. கருத்தரங்குகள் / தொடர் விவிலியப் பயிற்சி

துறவியர்க்கும் பொதுநிலையினர்க்கும் ஒவ்வோராண்டும் திண்டிவனத்திலும் மற்ற இடங்களிலும் விவிலியம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. 2009-2015 காலக்கட்டத்தில் இளைஞர்களுக்கு விவிலியத்தைக்கற்பிக்கவும் அவர்களை ஆன்மிகத்தில் வளர்த்தெடுக்கவும் ஆண்டு முழுவதும் தொடர் பயிற்சியும் கருத்தரங்குகளும் திண்டிவனத்தில் மட்டுமல்ல சிவகங்கை, தர்மபுரி செங்கல்பட்டு போன்ற இடங்களிலும் நடத்தப்பெற்றன. பவுலடியார் பற்றியும், 'ஆண்டவரின் அருள்வாக்கு' என்ற திருத்தூது மடல் பற்றியும் கருத்தரங்குகள் நடைபெற்றன. இறையிரக்கத்தின் ஆண்டில் (2015-2016) அது பற்றிய கருத்தரங்குகள் மையத்திலும் மற்றும் பல இடங்களிலும் நடைபெற்றன. அன்பிய ஒருங்கிணைப்பாளர்களுக்கும் விவிலியப் பின்னணியில் கருத்தரங்குகள் நடைபெற்றன.

மற்ற பணிக்குழுக்களுடனும் எம்மாவுஸ் மையத்துடனும் இணைந்து ஒரு சில கருத்தரங்குகள் நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அகில உலக அல்லது தமிழகத் திருஅவையிலும் முக்கியத்துவம் பெறுகின்ற கருப்பொருளில் ஒவ்வோராண்டும் கருத்தரங்குகள் ஏற்பாடு செய்வது வழக்கத்தில் உள்ளது.

ஆண்டு முழுவதும் இறைமக்களுக்கு தொடர் பயிற்சி அளிக்கும் விதமாக ஒருசில மறைமாவட்டங்களில் வார இறுதி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து பங்குபெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு தமிழக விவிலியப் பணிக்குழு சான்றிதழ் வழங்குகின்றது.