விவிலிய மொழிபெயர்ப்பும் பரவலாக்கமும்

இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் செய்த புரட்சிகளுள் ஒன்று திருவிவிலியத்தை இறைமக்களிடம் கொண்டு சேர்த்தது. "இறைமக்களிடமிருந்து வந்த திருவிவிலியம் இடைக்கலத்தில் அவர்களுக்கு அந்நியமானது. அதை அவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்வார் விவிலிய அறிஞர் லூசியன் லெக்ரான். சீர்திருத்தக்காலத்திலேயே தொடங்கிய இச்சிந்தனை இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் கனிந்தது. அதுவரை இலத்தீன் உல்காத்தா மொழிபெயர்ப்புக்கு முதன்மைத்துவம் கொடுத்த திருஅவை விவிலியத்தின் மூலமொழிகளான எபிரேயம், அரமேயம், கிரேக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. மூலமொழிகளிலிருந்து பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்து தக்க விளக்கவுரைகளுடன் திருவிவிலியத்தை இறைமக்களுக்குக் கொடுக்க விவிலிய அறிஞர்களை ஊக்கப்படுத்தியது (“இறைவெளிப்பாடு,” எண்.22).

தமிழகத் திரு அவையில் 19ஆம் நூற்றாண்டிலிருந்து உல்காத்தாவிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட தமிழ்த் திருவிவிலியமே பயன்பாட்டிலிருந்தது. பெங்களூரு புனித பேதுரு குருத்துவக் கல்லூரியின் விவிலியப் பேராசிரியர் லூசியன் லெக்ராண்ட் MEP குரு மாணவர்களைக்கொண்டு புதிய ஏற்பாட்டைக் கிரேக்கத்திலிருந்துத் தமிழுக்கு மொழி பெயர்க்கும் பணியை 1956இல் ஆரம்பித்தார். 1970இல் அப்பணி நிறைவு பெற்று அம்மொழி பெயர்ப்பு தமிழக ஆயர்களால் ஏற்கப்பட்டு திருத்தங்களுடன் வெளியிடப்பட்டது. 1974இல் கத்தோலிக்க - சீர்திருத்த சபை சார்ந்த விவிலிய அறிஞர்கள் இணைந்து விவிலியத்தின் மூல மொழிகளான எபிரேயம், அரமேயம் மற்றும் கிரேக்கத்திலிருந்து பொதுமொழிபெயரப்பு ஒன்றை உருவாக்க திட்டமிட்டு பணியைத் தொடங்கினார்கள். 1995 ஆம் ஆண்டு அது நிறைவுற்று நவம்பர் 26ஆம் நாள் வெளியிடப்பட்டது. இம்மொழிபெயர்ப்பு இந்திய மொழிகளில் முதலாவதாக வெளிவந்தது தனிச்சிறப்பு; ஒரு மைல்கல். அம்முயற்சியில் ஈடுபட்டு உழைத்தவர்கள் அனைவருக்கும் நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! திருப்பாடல்களுடன் கூடிய புதிய ஏற்பாடும் நல்ல வரவேற்பைப் பெற்றது. விவிலிய அறியாமை நீங்கி திருவிவிலியம் இப்போது இறைமக்கள் கையில் அவர்கள் தாய் மொழியிலேயே கிடைக்கிறது. இதுவரை வந்த பதிப்புகளில் விவிலியப் பிரதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மலிவு விலையில் மக்களுக்கு விவிலியத்தை வழங்க சாலக்குடி போட்டா தியான மையத்தோடு ஒப்பந்தம் செய்து விவிலியம் பல்லாண்டுகளாக அச்சடிக்கட்டது. வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா திருத்தலமும் குறைந்த விலையில் மக்களுக்கு விவிலியம் கிடைக்கும்படியாக பொருளுதவி செய்தது. "வீட்டுக்கொரு விவிலியம், நாளுக்கொரு அதிகாரம் என்பது போய் 'ஆளுக்கொரு விவிலியம், நாளுக்கொரு அதிகாரம்” என்பதை இலக்காக வைத்து பணிக்குழு செயலாற்றுகிறது. 2017- 2023 காலக்கட்டத்தில் வெளிநாட்டு உதவியுடன் இளைஞர்களுக்கு இலவசமாக விவிலியம் வழங்கப்பட்டது.