வரலாறு

1.பணிக்குழுவின் தோற்றமும் வளர்ச்சியும்

1972 ஆம் தொடங்கப்பட்ட விவிலிய அருள்பணிக்குழுவானது 1974ஆம் ஆண்டு முதல் திண்டிவனம் முப்பணி மையத்திலிருந்து செயல்பட தொடங்கியது. 6 பேராயர் / ஆயர்கள் தலைவர்களாகவும், 8 அருள்பணியாளர்கள் பொதுச் செயலர்களாகவும் பணிபுரிந்திருக்கிறார்கள். காலத்திற்கேற்ற திட்டங்களைத் தீட்டி பல்வேறு பணிகளை திறம்பட ஆற்றியுள்ளார்கள்.

தலைவர்ஆண்டுகள்செயலர்ஆண்டுகள்
பேராயர் R. அருளப்பா1972-1982அருள்பணி. பி.பி. சேவியர்1972 1982
பேராயர் M. ஆரோக்கியசாமி1982-1995அருள்பணி வ. மரியதாசன்1982-1996
ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ்1995-2002அருள்பணி. அ. பீட்டர் அபீர்1996 - 2002
ஆயர் சூசைமாணிக்கம்2002 - 2017அருள்பணி. ஜோமிக்ஸ்2002 - 2008
அருள்பணி. மரிய டெல்லஸ்2008 - 2015
ஆயர் தேவதாஸ் அம்புரோஸ்2017 - 2023அருள்பணி. ஜான் பேப்டிஸ்ட்2015 - 2017
அருள்பணி. ம. உபால்டு2017 - 2023
ஆயர் அ. ஸ்டீபன்2023 -அருள்பணி. ச. ஸ்தனிஸ்லாஸ்2023 -

விவிலிய அருள்பணிக்குழுவின் தலைவராக மேதகு. ஸ்டீபன் அந்தோணி, தூத்துக்குடி ஆயர் 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுகின்றார். முழு நேர பொதுச் செயலராக‌ அருள்பணி ச. ஸ்த‌னிஸ்லாஸ் பணியாற்றுகின்றார்.

தமிழத்தின் அனைத்து மறைமாவட்டங்களின் விவிலியப் பணிக்குழுவின் செயலர்கள் தங்கள் மறைமாவட்டங்களில் விவிலியப் பணியை ஒருங்கிணைக்கின்றனர். இதோடு தமிழ்நாடு புதுவை துறவியர் பேரவையும் விவிலியப் பணிகளை முன்னெடுக்கின்றது. விவிலியப்பேராசிரியர் பெரு மன்றமும் அருள்வாக்கு மன்றமும் விவிலிய அறிவு பரவலாக்கத்திற்கு காலத்தின் தேவைக்கு ஏற்ப பல நன்முயற்சிகளைச் செய்கின்றன. இவற்றோடு விவிலிய தன்னார்வலர்கள் பலர் தங்களின் பங்களிப்பை விவிலியப் பணிக்கு அளிக்கின்றனர்.

2.பூந்தமல்லி புனித பவுல் விவிலியப் பயிற்சி நிலையம்

விவிலியப் பணிக்குழுவின் வளர்ச்சியில் மற்றொரு படிநிலைதான் இவ்விவிலியப் பயிற்சி நிலையம். பொதுநிலையினருக்கும், துறவியர்க்கும் ஓராண்டு கால உருவாக்கப் பயிற்சியளித்து அவர்களை விவிலிய வல்லுநர்களாகவும் பணியாளர்களாகவும் உருவாக்கும் நோக்கத்தில் தமிழக ஆயர்களால் விவிலியப் பணிக்குழுவின் ஓர் அங்கமாகப் புனித பவுல் விவிலிய நிலையம் 1982ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 'சென்று போதியுங்கள்' என்ற விருதுவாக்கோடு பல அளப்பரிய பணிகளைத் தமிழகத் திரு அவைக்கு அது ஆற்றியுள்ளது. ஓராண்டுப் பயிற்சியை நன்கு திட்டமிட்டு விவிலியத்தின் அனைத்து நூல்களுக்கும் முன்னுரை, பின்னணி, விளக்கவுரை ஆகிய பொருள்களில் பாடங்கள் எடுக்கப்பட்டன.

மேலும் பெரியோருக்கான அஞ்சல் வழி விவிலியக் கல்வியை 1985 முதல் நடத்தியது. 1982இல் விவிலியக் கண்காட்சியும், 1989ஆம் ஆண்டு நடமாடும் விவிலியக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டன. திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியில் இயங்கிவந்த அருள்வாக்கு மன்றத்தின் வெளியீடாக இருந்த ‘பாதை காட்டும் விவிலிய விருந்து' என்ற விவிலிய மாத இதழை 1998 ஆண்டு முதல் வெளியிட ஆரம்பித்தது. சனி ஞாயிறுகளில் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அருள்வாக்கு இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி சென்னை மாநகரின் பல்வேறு பங்குகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற 85 பேருக்கு மாதம் ஒரு முறை ஓராண்டுக்குத் தொடர் பயிற்சியளிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடி, குறைந்த மாணவர் வருகை போன்ற காரணங் களுக்காக விவிலியப் பயிற்சி நிலையம் 2015க்குப் பின் செயற்பட முடியாமல் போயிற்று.

இயக்குநர்கள்

வ.எண்பெயர்காலம்
1அருள்பணி. V. மரியதாசன்1982 1987
2அருள்பணி. A. பீட்டர் அபீர்1987 1990
3அருள்பணி. V. இரபேல்1990 1996
4அருள்பணி. A. பீட்டர் அபீர்1996 2002
5அருள்பணி ஜோமிக்ஸ்2002 2011
6அருள்பணி. தெயோபிலஸ் SDB
அருள்பணி. செல்வநாதன் (உதவி இயக்குநர்)
2011 2012
7அருள்பணி. தேவா ஜோ ச.ச.
அருள்பணி. தோமினிக் சகாயராஜ் (உதவி இயக்குநர்)
2013 2014

3.விவிலிய அருள்பணிக்குழு

தொலைநோக்குப் பார்வை

திருவிவிலியம் இறைவன் தன் மக்களுக்கு அருளிய வெளிப்பாட்டின் நூல். எனவே அது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். எனவே திருவிவிலியத்தை வெவ்வேறு விதங்களில் மக்களிடையே பரப்புவதும், அதன் ஆன்மிகத்தையும், மதிப்பீடுகளையும் மக்களுடைய உள்ளங்களில் விதைத்து, அவர்களை நற்செய்தியின் தூதுவர்களாக்கி, சமுதாயத்தை மேம்படுத்துவதும் விவிலிய அருள்பணிக்குழுவின் ஒப்பற்ற பணியேயாகும். இந்த ஒரு தொலைநோக்கோடு தமிழக விவிலிய அருள்பணிக்குழு கடந்த 50 ஆண்டுகளாகப் பணிசெய்து வந்துள்ளது. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து காலத்துக்கு ஏற்ற புதிய முன்னெடுப்புக்களோடு புதுப்பொலிவுடன் தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பணியாற்ற பணிக்குழு தன்னையே அர்ப்பணித்துக்கொள்கிறது.

இலக்கு

  • நம்பிக்கையாளர் எல்லாரிடத்திலும் விவிலியத்தின்பால் ஆர்வத்தையும் தாகத்தையும் ஏற்படுத்துவது.

  • திருவிவிலியம் என்பது வாழ்வின் நூல் என்பதை அனைவரும் உணரச்செய்வது.

  • திருவிவிலியம் இறைவிருப்பத்தை நமக்கு வெளிப்படுத்தும் நூல் என்பதை அனைவரும் அறியச்செய்வது.

  • எல்லா நம்பிக்கையாளரும் விவிலியத்தின் விழுமியங்களைக் கற்றுக்கொண்டு அவற்றை உள்வாங்கி, வாழ்வாக்க பயிற்சி தருவது.

  • விவிலியக் கலாச்சாரத்தை, விவிலியத்தின் அடிப்படையிலான வாழ்க்கை முறையை நம்பிக்கையாளர் அனைவரும் கைக்கொள்ளச் செய்வது.

  • தங்கள் வாழ்வினால் திருஅவையிலும் சமூகத்திலும் அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஆற்றல்படுத்துவது.

  • படிப்பறிவற்ற பாமரரும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தெரிந்துகொள்ள ஆவனசெய்வது.

இலக்குகளை அடைவதற்கான செயல்திட்டங்கள்

  • ஒவ்வொரு நம்பிக்கையாளருககும் திருவிவிலியம் கிடைக்க ஆவன செய்தல்.

  • நம்பிக்கையாளர் அனைவரும் முழுவிவிலியத்தை அல்லது புதிய ஏற்பாட்டை மட்டுமாவது வாசித்து முடிக்க வழிமுறைகளைக் காட்டி ஊக்கப்படுத்துவது.

  • அனைத்து நம்பிக்கையாளருக்கும் திருவிவிலியத்தைப் பற்றிய தெளிவான புரிதல் கிடைக்க ஏற்பாடு செய்தல்.

  • மறைமாவட்ட திருவிவிலியப் பணி செயலர்கள் மற்றும் இறைவார்த்தைப் பணியாளர்கள் கூட்டத்தில் விவாதித்த செயல் திட்டங்களை உருவாக்குதல்.

  • குருக்கள், துறவறத்தார், பொது நிலையினருக்குக் கருத்தரங்குகள் மூலம் விவிலிய விளக்கங்களில் தற்போதைய வளர்ச்சி பற்றி எடுத்துரைப்பது.

  • பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், கிறிஸ்தவ மாணவ, மாணவியரைச் சந்தித்து திருவிவிலியத்தை நாள்தோறும் வாசிக்க வழிமுறைகளைக் கற்றுக்கொடுப்பது, அவர்களை ஊக்கப்படுத்துவது.

  • வாசிப்பின் மூலம் கற்றதை நண்பர் குழுவில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது பகிர்ந்துகொள்ள அவர்களைப் பயிற்றுவிப்பது.

  • இளையோரை இறைவார்த்தைப் பணியாளர்களாக உருவாக்குவது.

  • விவிலிய வகுப்புகள், கருத்தரங்குகள், மறைமாவட்ட - மறைவட்ட - பங்கு அளவில் மாதம் ஒரு முறையாவது நடத்த ஏற்பாடு செய்வது.

  • பள்ளி மாணவ, மாணவியருக்கு மாதம் ஒரு முறையாவது விவிலிய வகுப்பு ஒவ்வொரு பங்கிலும் நடத்த ஏற்பாடு செய்வது.

  • படிப்பறிவற்ற பாமரரும் மாற்றுத் திறனாளிகளும் இறைவார்த்தையைத் தெரிந்துகொள்ள ஆவனசெய்வது.

  • மறைமாவட்ட அளவில் விவிலிய மாநாடு, விவிலியக் கண்காட்சி நடத்துவது.

  • VBS எல்லா மறைமாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற ஊக்கம் கொடுப்பது.

  • VBS சிறந்தமுறையில் நடைபெற மறைமாவட்ட அளவில் நடைபெறும் பயிலரங்கத்தைப் பார்வையிட்டு ஊக்கப்படுத்துவது.

  • இறைவார்த்தைப் பணியாளருக்கான வருடாந்திரக் கூடுகையைத் தொடர்ந்து நடத்துவது. இணையவழி, அஞ்சல்வழி வகுப்புகளிலும், மே மாத்தில் நடைபெறும் நேரடி வகுப்புகளிலும் நம்பிக்கையாளரின் பங்கேற்பை மிகுதிப்படுத்துவது.

  • மறைமாவட்ட, பங்கு அளவில் 'விவிலிய வங்கி” தொடங்க ஊக்கமளிப்பது.

  • விவிலியப் போட்டிகள், வினாடி வினாக்கள், விவிலிய மாத்திலும், VBS வகுப்புகள் முடிவிலும் ஒவ்வொரு பங்கிலும் நடத்த ஏற்பாடு செய்வது.

  • ஒவ்வொரு பங்கிலும் விவிலியப் பணிக்குழு ஏற்படுத்துவது.

  • ஒவ்வெரு துறவற சபையிலும் ஒருவரை விவிலியப் பணிக்கென்று அர்ப்பணிக்கச் செய்து விவிலியப் பணிக்கு அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறுவது.

பணிக்குழுவின் செயல்பாடுகள்

  • விவிலிய மொழிபெயர்ப்பு

  • விவிலியம் அச்சிட்டு விற்பனைக்கு கொணர்தல்

  • பொது மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்துதல்

  • விவிலிய மாதம், வாரம் மற்றும் ஞாயிறுக்கான துணைக்கருவிகளை தயாரித்து வழங்குதல்

  • தமிழிலும் ஆங்கிலத்திலும் அஞ்சல் வழி விவிலியக் கல்வி

  • தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையவழி விவிலியக் கல்வி

  • விடுமுறை விவிலியக் கல்விக்கான (Vocational Bible School, VBS) துணைக்கருவிகள், மற்றும் பாடல்கள் தயாரித்து அளித்தல்

  • விடுமுறை விவிலியக் கல்வி (VBS) ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்

  • திருவிவிலியத்தைப் புரிந்து கொள்ளும் வண்ணம் துணை நூல்களை வெளியிடல்

  • விவிலிய இறையியல் சார்ந்த தலைப்புகளில் விவிலிய கருத்தரங்குகள் நடத்துதல்.